Tuesday 31 July 2018

அப்துல் கலாம் வரலாறு Dr. A.P.J. Abdul Kalam Biography




அப்துல் கலாம் வரலாறு Dr. A.P.J. Abdul Kalam Biography



இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:      

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:     

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.

இறுதி மரியாதை:

இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
      
    Turning Points; A journey through challenges 2012.Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.Mission India (திட்டம் இந்தியா) ; ஏ பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.(Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.மறைவுக்குப் பின்னர் பெற்ற சிறப்புகள்:அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளான ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.பீகார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு எ. பி. ஜெ. அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதன் விவேகனந்தர், 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் காந்தி அடிகள், 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் என்று புகழ் பாடப்பட்டது.

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை

நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

"உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்."

Wednesday 4 July 2018

ஜியோ ஓனர் முகேஷ் அம்பானியின் வரலாறு



முகேஷ் அம்பானி







‘முகேஷ் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘முகேஷ் திருபாய் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானியின்’ மகன் ஆவார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக’ ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ், இவரது பெயரைப் பட்டியலில் வெளியிட்டது. மேலும் இவர், ஆசியாவின் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகின் 19 வது பணக்கார மனிதராகவும் கணிக்கப்பட்டு, அப்பட்டியலில் இடம்பெற்றார். அதுமட்டுமல்லாமல், இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் இன்னொரு முகமாகவே தன்னை வெளிப்படுத்தி, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்கும் முகேஷ் அம்பானி அவர்களின், வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஏப்ரல் 19, 1957
பிறப்பிடம்: மும்பை மாநிலம், இந்தியா
பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
முகேஷ் அம்பானி அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “மும்பையில்”, இந்தியாவின் ‘வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றாப்படும் திருபாய் அம்பானிக்கும் (இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்)’, கோகிலாபென் அம்பானிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்ற சகோதரரும், தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் ஜீனாகட் மாவட்டத்திலுள்ள சோர்வாட் ஆகும்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய ஆரம்பக் கல்வியை மும்பையுள்ள அபே மொரிச்சா பள்ளியில் தொடங்கி இவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி.இ பட்டம் பெற்றார். அதன் பிறகு, இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க அமெரிக்கா பயணமான முகேஷ் அவர்கள், கலிஃபோர்னியாவில் உள்ள இஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில் 1980 -இல் தன்னுடைய படிப்பைக் கைவிட்டு இந்தியா திரும்பினார்.
வணிகத்தில் ஈடுபடக் காரணம்
இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. அப்பொழுது இவருடைய தந்தை திருபாய் அம்பானி அவர்கள், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மேலும், இவருடன் டாட்டா, பிர்லா என இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இப்படிப்பட்ட கடுமையான போட்டிக்கு மத்தியில் இவருடைய தந்தை திருபாய் அம்பானிக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டது. இதனால், தந்தையின் பொறுப்புகள் அதிகமானதால், தன்னுடைய எம்.பி.ஏ படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டு, தந்தைக்கு உதவியாக ரிலையன்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் பொறுப்புகளை ஏற்றார்.
தொழில் வளர்ச்சியில் மேற்கொண்ட சாதனைகள்
ரிலையன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி எனத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1981 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி என மேலும் பல தொழில் அமைப்புகளைத் தொடங்கி தன்னுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். அதுமட்டுமல்லாமல், உலகில் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களைக் கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளைக் கொண்ட ‘இன்ஃபோகாம் நிறுவனத்தை’ (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார். பின்னர், அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தை ஜாம்நகரில் நிறுவி, அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகப்படுத்தினார். மேலும், இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளின் நிர்வாக இயக்குனராகவும், அதனை வழிநடத்துபவராகவும் செயல்பட்டார்.
ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள், அரசியல் சவால்கள் எனப் பல தடைகளை சமாளித்து தன்னுடைய தந்தைக்கு பக்கபலமாக இருந்த இவர்,  தந்தை திருபாய் அம்பானியின் இறப்பிற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் ஆளப்போகிறவர் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், அவருடைய சகோதரர் அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருடைய குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. இதனால், அம்பானியின் குடும்பச் சொத்துக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோகெமிக்கஸ் நிறுவனம் முகேஷிடமும், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியிடமும் பிரித்துக்கொடுக்கப்படது.
தனிப்பட்ட வாழ்க்கை
முகேஷ் அம்பானி அவர்கள், நீதா அம்பானி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஷா என்ற மகளும், ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் மும்பையில் அண்டிலியா என்று பெயரிடப்பட்ட 27 மாடி கட்டிடம் கொண்ட மிகவும் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு அமெரிக்க டாலரில் 2 பில்லியன்கள் ஆகும்.
விருதுகளும், மரியாதைகளும்
  • 2010 – ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் ‘குளோபல் விஷன் விருது’.
  • என்.டி.டி.வி (இந்தியா) மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘சிறந்த வர்த்தக தலைவர் விருது’.
  • பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘தொழிலதிபர் விருது’.
  • 2010 – ஐ.எம்.சி அமைப்பின் மூலம் 2009 ஆம் ஆண்டிற்கான ‘ஜுரான் தர பதக்கம்’.
  • 2010 – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம்’.
  • அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது’.
  • குஜராத் அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டிற்கான ‘சித்திரலேகா நபர் விருது’.
 முகேஷ் அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கு முன்னால், இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானி’ என்னும் மிகப்பெரிய தொழில் பின்னணி இருந்தாலும், தன்னுடைய திறமையான வர்த்தகச் சிந்தனையால், லாபம் தரும் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவின் நவீனத் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார். 2007 ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் அதிகரித்ததின் காரணமாக இவர், ‘உலக பணக்கார மனிதர்’ எனவும் அறியப்படுகிறார்.

Monday 2 July 2018

முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானியின் வரலாறு




திருபாய் அம்பானி




‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும்’, ‘இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும்’ தேர்வு செய்யப்பட்டார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடக்கூடிய அளவில், தன்னுடைய வர்த்தகப் பங்குகளை உயர்த்தி, பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, திருபாய் அம்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 28, 1932

பிறப்பிடம்: குஜராத் மாநிலம், இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்

இறப்பு: ஜூலை 06, 2002

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

திருபாய் அம்பானி அவர்கள், 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம் சோர்வாத் அருகிலுள்ள “குகஸ்வாடாவில்”, ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக ஒரு நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பிறகு தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அந்நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றி வந்த அவர், பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. ஒரு காலகட்டத்திற்க்கு பிறகு, சமபக்லால் தமானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாகப் பிரிந்த திருபாய் அம்பானி அவர்கள், தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

வெற்றிப் பயணம்

1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை உணர்ந்த அவர், தன்னுடைய முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977 ஆம் ஆண்டு துவங்கினார். விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதனால், 1977 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, ‘பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக’ விளங்கினார்.

பல பிரச்சனைகள் வந்தாலும், முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் துவங்கிய அவர், தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பெட்ரோலிய வேதிகள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்குப் போக்குவரத்து எனப் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, மாபெரும் வளர்ச்சிப் பாதையில் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

திருபாய் அம்பானி அவர்கள், கோகிலா பென் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோத்தாரி மற்றும் நினா சல்கோகர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

இறப்பு

மும்பையில் முல்ஜி-ஜீதா துணிச் சந்தையில் ஒரு சிறு வணிகராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி அவர்கள், 2002 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் தேதி தன்னுடைய 69 ஆம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

விருதுகளும், மரியாதைகளும்

2000 – இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவருடைய பங்களிப்பைப் பாராட்டி, கெம்டெக் ஃபவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வோர்ல்ட் அமைப்புகள் அவருக்கு, ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர் விருதினை’ வழங்கி கௌரவித்தது.1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டிடு ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.2001 – தி எக்கனாமிக் டைம்ஸ், பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டிற்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது.இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் ‘இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக’ தேர்வு செய்யப்பட்டார்.2000 – டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில், ‘நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக’ தேர்வு செய்யப்பட்டார்.

உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை என அனைத்தையும் தன்னுடைய முன்னேற்றத்தின் மூலதனங்களாக சமர்பித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கிற வகையில், வணிகத்தில் மாபெரும் புரட்சிக் கண்டவர் திருபாய் அம்பானி அவர்கள். குறிப்பாக சொல்லப்போனால், திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் எனக் கூறிய திருபாய் அம்பானி, இன்று சுயமாகத் தொழில் செய்யும் ஒவ்வொருவரின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.


அடுத்தது முகேஷ் அம்பானியின் வரலாறு வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்....