Wednesday 23 January 2019

நடிப்பால் அனைவரையும் மிரட்டிய ஹீத் லெட்ஜரின்(Heath Ledger) வலி மிகுந்த வாழ்க்கை!!!

ஹீத் லெட்ஜர் எனும் ஜோக்கர் நாயகனின் வலி மிகுந்த வாழ்க்கை !




ஹீத் லெட்ஜெர் இறந்த நாள் நேற்று என்று இன்றுதான் வலைதளத்தில்தான் பார்த்தேன்.அதன் பிறகே அவரின் வலிமிகுந்த வாழ்க்கையை எழுதினால் என்ன என்று தோன்றியது.அதன்படியே எழுதியதுதான் இந்த தொகுப்பு.முழுமையாக படியுங்கள் மெய் சிலிர்த்து போவிர்கள்.......

நடிப்புலகின் உச்சம் இவர் என்று உலகம் சொல்வதற்கான கணம் வருவதற்கு முன்பே மரணத்தின் உதடுகள் இருபத்தி எட்டு வயதில் பற்றிக்கொண்ட நாயகன் அவர்.

ஆஸ்திரலியாவில் பிறந்த லெட்ஜெருக்கு ஹீத் என்கிற பெயர் வுதரிங் ஹைட்ஸ் படத்தின் ஆண்டி-ஹீரோவின் நினைவாக வைக்கப்பட்டு இருந்தது. அவரின் வாழ்க்கையிலும் சோகம் விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை அப்பொழுதே பெற்றோர் உணர்ந்திருந்தார்களோ என்னவோ ?

பத்து வயதை தொட்ட பொழுது இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்திருந்தன. அவரின் அப்பாவும்,அம்மாவும் பிரிந்திருந்தார்கள். இரண்டு வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து அன்பின் சுவடுகள் அவருக்கு என்ன என்றே தெரியாமல் போயின. வகுப்பில் சமையல் அல்லது நடிப்பு ஆகிய இரண்டில் ஒன்றை பாடமாக தெரிவு செய்ய வேண்டும் ! சமையலில் இருந்து தப்பித்தால் போதும் என்று தான் நாடகத்தின் பக்கம் வந்தார் அவர்.

செஸ் மற்றும் மோட்டார் விளையாட்டில் கலக்கிக்கொண்டு இருந்த லெட்ஜரை இரண்டாவது விஷயத்தில் ஈடுபடுத்தி பெரிய ஆள் ஆக்கலாம் என்று தந்தை விரும்பினார். விடுங்கள் என்னை என்று பதினாறு வயதில் பள்ளியை விட்டு நீங்கி நண்பனோடு நடிப்புலகில் தனக்கான இடத்தை தேடி சிட்னி நகருக்கு சில சென்ட்களோடு வந்து சேர்ந்தார்.

அங்கே டி.வி.சீரியல்களில் வேடங்கள் கிடைத்தன. “நன்றாக நடிக்கிறாய் நீ !” என்று சொன்னதோடு நில்லாமல் ஹாலிவுட் போய் பார் என்று உடனிருந்தவர்கள் ஊக்கப்படுத்த அமெரிக்காவுக்கு வந்தார். சில படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிதாக கவனம் பெறாமல் போயின. ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு முறை பண்ணிய வேடத்தின் சாயலில் இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்திருந்தார் லெட்ஜெர்

“10 Things I Hate About You,” படத்தில் ரொமாண்டிக்கான ரோலில் பின்னியிருந்தார் அவர். அதே மாதிரி வேடங்கள் ஒருவருடம் முழுக்க வந்த பொழுது அவற்றை ஏற்க மறுத்தார் அவர். அமெரிக்காவின் விளம்பரப்படுத்தும் யுக்திகள் அவருக்கு கைவரவே இல்லை. வெறும் டாப் ரேமன் நூடுல்ஸ் மற்றும் தண்ணீர் ஆகியவற்றோடு பணமில்லாமல் தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் படத்துக்காக காத்திருந்தார் அவர். “பணம் உங்களுக்கு முக்கியமில்லையா ?” என்று கேட்கப்பட்ட பொழுது ,”என் ஊரில் இருந்து கிளம்பி வந்த பொழுது என்னிடம் பணம் எதுவும் இல்லை. இப்பொழுதும் பணம் எனக்கு முக்கியமாகப்படவில்லை. !” என்று அழுத்தமாக சொன்னார் அவர்.

தி லைப் ஆப் பை படமெடுத்து ஆங் லீ இரண்டு கௌபாய்களுக்கிடையே ஏற்படும் ஓரினச்சேர்க்கை உறவும் பிரிந்து மீண்டும் அவர்கள் சந்திக்கிற பொழுது உண்டாகும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்ட படத்தில் இவரை ஒரு கௌபாயாக நடிக்க வைத்தார். அந்த ப்ரோக்பாக் மவுண்டென் படத்தில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு அந்த சிறுகதையை எழுதியவர் ,”என் கதையை இப்படிக்கூட நடிப்பால் இன்னமும் ஒரு படி மேலே கொண்டு போய் விட முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை !” என்று சிலிர்த்துப்போய் சொன்னார். அந்த படத்துக்கு சிறந்த நடிகருக்கான அகாடமி விருது நூலிழையில் கிடைக்காமல் போனது.

ஓரிரு காதல்கள் உடைந்த பிறகு மிச்செல் உடன் காதல் கைகூடி இருந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அன்பெனும் அற்புதம் லெட்ஜரின் வாழ்க்கையில் வீச ஆரம்பித்தது. “ஆறு பிள்ளைகள் பெற்றுக்கொள்ள எண்ணியிருக்கிறோம் நாங்கள் !” என்று பேட்டியெல்லாம் கொடுத்தார்கள். திடீரென்று ஒரு நாள் பிரிந்தார்கள். ஹெராயின் பழக்கம் தொற்றிக்கொண்டது.

நோலன் The Dark Knight படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடிக்க இவரை புக் செய்த பொழுது பலர் அதிர்ந்தது உண்மை. “இந்த வேடத்தில் லெட்ஜரை எல்லாம் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. படத்தை கண்டிப்பாக நான் பார்க்கப்போவதில்லை !” என்றொரு விமர்சகர் எழுதினார். நான்கு மாதங்கள் தனியாக ஒரு அறையை அமெரிக்காவில் எடுத்துக்கொண்டு தனிமையில் மூழ்கி,தூக்கம் தொலைத்து,டைரியில் ஜோக்கருக்கு பிடித்த விஷயங்களால் நிரப்பி அவர் தயாராகி இருந்தார். 

படத்தின் கதாப்பாத்திரத்தை இப்படி விவரித்தார் அவர் :”psychopathic, mass-murdering, schizophrenic clown with zero empathy.” இரண்டே மணிநேரம் மட்டுமே தூங்கி,தன்னை வருத்திக்கொண்டு ஜோக்கராகவே மாறியிருந்தார் அவர். எப்பொழுதும் செட்டில் ஒவ்வொரு ஷாட்டிலும் தானே முழுமையாக இயக்கம் நோலன் இவரை சில காட்சிகளை இயக்க சொல்கிற அளவுக்கு அசத்திக்கொண்டு இருந்தார் ஹீத் லெட்ஜர். ஜோக்கர் கை தட்டுகிற காட்சி படத்தின் ஷூட்டிங்கின் பொழுது அந்த கணத்தில் இவரே தன்னிச்சையாக செய்தது. அதோடு ஹான்ஸ் ஜிம்மரின் இசை சேர்ந்து என்னவோ செய்தது ரசிகர்களை ! 

படத்தின் எடிட்டிங் நடந்து கொண்டிருந்த பொழுதே தன்னுடைய அறையில் அதீதமாக தூக்க மருந்தை எடுத்துக்கொண்டதால் உடலில் ஆடையின்றி இறந்து கிடந்தார் லெட்ஜர். படம் வந்த பிறகு அவருக்காகவே பல கோடி பேர் படத்தை பார்த்து கொண்டாடி கண்ணீர் விட்டார்கள். ஆஸ்கர்,கோல்டன் க்ளோப்,பாஃப்டா உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை ஜோக்கர் வேடத்துக்காக வென்ற லெட்ஜர் மரணத்துக்கு முந்தைய தினம் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ? தன்னுடைய இரண்டு வயது மகளோடு விளையாடிக்கொண்டிருந்தார்

No comments:

Post a Comment