Saturday 23 May 2020

நாம் அனைவரும் தவறானவர்களோ???(We Are all Wrong?)


நாம் கவனிக்க தவறும்… கவனத்துக்குறியவைகள்!!!

அன்றாட வாழ்வின் அவசரத்தில்…

பொருள் தேட வேண்டிய வேட்கை…
வெற்றியாளர்களாய் ஆகவேண்டிய போட்டி…
அதிகாரத்தை அனைத்துக் கொள்ள துடிக்கும் ஆசை…
நாம் கனவிலும் நினைத்துப் பார்க்கா வாழ்க்கைக்கான கனவு…
இப்படி நாளுக்கு நாள் எப்படி வாழ்கிறோம்… எதற்காக வாழ்கிறோம்… ஏன் வாழ்கிறோம்… யாருக்காக வாழ்கிறோம்…
என எண்ணெற்ற கேள்விகளுக்கு விடைகான விழைகையில்…
விளங்காமலே போகிறது நாம் வாழ்வையே இழக்கிறோம் என்பது…
வாழ்க்கை மிக மிக அழகானது. அனு அனுவாய் அனுபவிக்க கூடியது என நமக்கு நாமே சொல்லிக் கொடுக்க தவறிவிட்டோம். வாழ்க்கையை அதன் போக்கிலே போகவிட்டு வாழ்வது கடினமானதுதான். இன்றைய பொருள் முதல்வாத சமூகத்தில் அதற்கு அத்தனை சாத்தியமும் இல்லைதான்.
ஆனாலும் வாழ்வை வாழமுடியும் ரசனையோடு.
பணம் கொண்டவன் மடி மட்டுமல்ல… மனமும் கனமாகவே இருக்கும் இன்றைய சூழலில், மனிதர்களுக்கு முக்கியத்துவம் தரும் மனப்போக்கு நம்மிடமிருந்து மறைய துவங்கியிருக்கிறது. அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்தில் பரிமாறப்பட்ட உணவுகளும், அவர் விரும்பி செய்த பணிகளையும் அறிந்து கொள்ள நம்மிடையே இருந்த ஆர்வம், நம் சக மனிதர்களின் மேல் இல்லாமல் இருக்கிறதே ஏன்???
நம் அன்றாட வாழ்வில் நம்மை கடந்து போகும் எத்தனையோ மனிதர்கள் நம்மால் கவனிக்கப்படாமலேயே போகிறார்களே… இதை என்றாவது கவனித்திருக்கிறோமா நாம்?
அடுத்த தேசத்தின் அழுகுரலுக்கு மனமிறங்கும் நாம்… நமக்கு பக்கத்தில் இருந்து நம்வாழ்வுக்காக பயன்படுபவர்களை பரிவுடன் பார்க்கும் பண்பும் குறைந்து கிடக்கிறோமே ஏன்?
நம் வீட்டுக் கழிவறைகளின் தூய்மையை உறுதிப்படுத்திக் கொள்ள நாம் எடுக்கும் எந்த அக்கறையும் நம்மால் கொடுக்காப்படாத நிலையில்தானே தெருக்களில் இருக்கும் பாதாள சாக்கடைகள் அடைத்து… கழிவு நீர் காவிரியாக கரைப் புரண்டோடுகிறது… மூக்கை பொத்திக் கொண்டு நாம் கடந்துப்போகும் நம் கழிவுகளுக்குள்  மூழ்கி சுத்தம் செய்யும் தோழர்களை என்றாவது கரிசனத்தோடு பார்த்ததுண்டா நாம்??? கைகுலுக்கி நன்றி சொன்னதுண்டா நாம்???
மின் இனைப்பு துண்டிக்கப்பட்ட இரவுச் சூழலை வாழ்ந்துப் பார்த்தவர்களுக்குதான் தெரியும் அதன் கொடுமை…இப்படியே இரவை கடத்திய பின்னர் காலையில் மின் இனைப்பை சரி செய்து கொடுக்கும் தோழருக்கு ஒரு நன்றி சொல்லவும் நம் மனங்கள் முன்வருவதில்லையே ஏன்??? முரணாக ஒரு “பீஸ் கேரியரை” மாட்டவா ஐம்பது ரூபாய் என அவரிடம் பேரம் பேசுகிறோமே…
தங்களுக்கு பொழுது போகாத வேளைகளில் எல்லாம் பெட்ரோல் / டீசல் விலையை ஏற்றுகிறது எண்ணெய் நிறுவணங்கள்… அதை மவுணமாகவே ஆமோதிக்கிறது மத்திய அரசு. இவர்களை எதிர்த்து ஏன் நாம் தெருக்களில் வந்து போரிடவில்லை ? மாறாக விலையேற்றத்தின் விளைவாக 7 ரூபாய்க்கு பயணித்த இடத்துக்கு 10 ரூபாய் என வாங்கும் “ஷேர் ஆட்டோ” ஓட்டுனரிடம் சண்டைப் பிடிக்கிறோமே ஏன்?
வாழ்க்கை வேகமாகி கொண்டேதான் போகிறது. மறுப்பதற்கில்லை… காலை நேர பரபரப்பு கடந்து கணவனோடு அலுவலகம் பறக்கையில் வழியில் தென்படும் கோயிலகளுக்கும்… அதனுள் உறங்கும் கடவுளுக்கும்… பயணித்தப்படியே… வேண்டுதலையும்… காணிக்கையையும் முத்தமாக கொடுத்துவிட்டு கடக்கிறோம். இயந்திர வாழ்வின் எதார்தமான தருணங்கள் இவை…
இருப்பினும் வாழ்க்கை மிக மிக அழகானது… அனுபவித்து, ரசித்து வாழ்கிறவர்களுக்கு…
நீங்கள் அடுத்தமுறை சந்திக்கும்…

குப்பை அள்ளும் தோழருக்கு “நன்றி” சொல்லுங்கள்…

காய் விற்கும் பாட்டியிடம் “போயிட்டு வருகிறேன்” என சொல்லிப்பாருங்கள்…

தொழிலாளர்களுக்கான ஊதியத்தை “குறைக்காமல்” கொடுத்துப் பாருங்கள்…

தெருவோரக் கடைகளில் “பேரம் பேசாமல்” பொருள் வாங்கிப் பாருங்கள்…

எதிர்படும் எல்லோரையும் சிரித்த முகத்தோடே கடந்து பாருங்கள்…

இன்றைய நிமிடங்களை விட… அந்த தருணங்கள் அற்புதமாக இருக்கும்…
முயற்சித்துவிட்டு சொல்லுங்கள்… மீண்டும் சந்திப்போம்… சேர்ந்து சிந்திப்போம்!!!

என்றும் அன்புடன் உங்கள் சேவகன் சுபாஷ்!!!

No comments:

Post a Comment