Saturday 30 May 2020

பெண்கள் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய தற்காப்பு கலைகள்(Women's Must learn the Defensives)


பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். சமீப காலமாக பெண் குழந்தைகள் இந்த கொடுமைகளுக்கு ஆளாவது அதிகரித்து வருகின்றது. பாலியல் கல்வி, பாலின சமத்துவம் குறித்த உரையாடல் எவ்வளவு முக்கியமோ அதேபோல பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதும் காலத்தின் தேவையாகிறது. பெண்கள் கற்றுக் கொள்வதற்கு பொருத்தமான தற்காப்பு கலைகளை அறிமுகப்படுத்துவது தற்போதைய காலகட்டத்தில் அவசியமாகிறது.


1. கிராவ் மகா


இந்த தற்காப்பு கலை இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் உருவாக்கப்பட்டது. இது, ஐகிட்டோ, ஜூடோ, பாக்ஸிங், ரெஸ்லிங் போன்ற கலைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. உண்மையாகவே தெருவில் ஒரு சண்டையிட வேண்டிய சூழல் வந்தால் எவ்வாறு திறமையாக செயல்படலாம் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட ரியலிஸ்டிக் சண்டை கலை, கிராவ் மகா. இந்த கலையில் பெண்களுக்கு சாதகமான அம்சம் என்று சொன்னால், சண்டையின்போது எந்த நிலையில் இருந்து எதிரியை தாக்க வேண்டும் என்பதை விட, தவறான நிலையில் இருந்து எதிரியிடம் அகப்பட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதே. மேலும் இந்தக் கலையில், சுற்றியுள்ள பொருட்களை அவதானித்து அவற்றைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கற்றுத் தரப்படுகிறது. எதிரி பலமான ஆயுதம் வைத்திருந்தாலோ, ஒன்றுக்கு மேற்பட்ட எதிரிகள் இருந்தாலோ கன நேரத்தில் முடிவெடுக்கும் ஆற்றலையும் இந்தக் கலை வளர்க்கிறது.


2. ஜூடோ


ஜூடோ என்பதற்கு முறையான வழி என்று பெயர். உடல், புத்தி ஆகியவற்றை ஒருமுகப்படுத்தி எதிரியை வீழ்த்துதல், இதன் வழிமுறை. இந்தக் கலையை முறையாக கற்பதன் மூலம், எதிரியை தனது இயல்பான பலத்தைக் கொண்டே தூக்கி எறியவும், தரையில் வீழ்த்தவும் முடியும். 19 ஆம் நூற்றாண்டில் இறுதியில் ஜப்பானில் தோன்றிய இந்தக் கலை, 1964 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்கள் பிரிவிலும், 1992 ஆம் ஆண்டு முதல் பெண்கள் பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுக்க பிரபலமடைந்துள்ள இந்தக் கலையை சென்னையிலும் கற்றுக்கொள்ளலாம். பெண்களுக்கு எதிர்பாராத நேரத்தில்தான் ஆபத்துகள் வருகின்றன. எதிர்பாராத நேரத்தில் நடக்கும் தாக்குதலின்போது எப்படி சுதாரிப்பது என்பதுதான் ஜூடோவின் முதல் பாடம். குறிப்பாக அடிபடாமல் கீழே விழ கற்றுக் கொடுக்கப்படுகிறது. கீழே விழும்போதே சுதாரிப்பவர்கள்தான் திரும்பத் தாக்க முடியும். ஜூடோவைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை சமாளிப்பது கடினம்.


3. தாய் பாக்ஸிங்


முவா என்று அழைக்கப்படும் தாய் பாக்ஸிங் பெண்களுக்கு மிகச்சிறந்த தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் கொடுக்கும். உதைத்தல், முழங்காலில் தாக்குதல், முழங்கைகளைப் பயன்படுத்தி தாக்குதல், குத்துதல் ஆகியவைதான் முவா. இரண்டு முஷ்டிகள், இரண்டு முழங்கைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு பாதங்கள் இவைதான் இந்த சண்டைக்கான மூலதனம். இந்த சண்டையைக் கற்றுக் கொள்ள எலும்புகள் வலுவோடு இருக்க வேண்டும். இந்த எட்டு எழும்புகளை வைத்து எவ்வளவு பலசாலியையும் நிலைகுலைச் செய்வதற்கான வழிமுறைகள் இந்தக் கலையில் உள்ளன. பெண்களிடம் தொல்லை கொடுப்பவர்கள் அருகில் நெருங்கி வந்துதான் சீண்டுவார்கள். அவ்வாறு செய்யும்போது எதிரி நிற்கின்ற இடத்தைப் பொறுத்து, தனது மூட்டுகளால் பலமாகத் தாக்கினால் அங்கேயே எதிரி வீழ்த்தப்படுவது உறுதி.


4. கராட்டே


ஜப்பானில் 14 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த கலை, தற்போது உலகின் அனைத்து தேசங்களையும் சென்றடைந்துள்ளது. சுருக்கமாக கராட்டே இல்லாத நாடுகளே இல்லை எனலாம். தன்னை விட அதிக பலம் கொண்டவர்களை திறமையாக வீழ்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தற்காப்பு கலை வடிவம், கராட்டே. இது பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட கலை இல்லை என்றாலும், இயல்பாகவே பருமனில், எலும்புகளின் உறுதியில் அதிகமாக இருக்கின்ற ஆண்களை எளிதாக வீழ்த்த இந்தக் கலை பயன்படுகிறது. கராட்டே கற்றுக் கொள்வதன் மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கை, தன்மதிப்பு, தைரியம் கிடைக்கிறது. வாழ்வின் எந்தப் பிரச்னையின்போதும் பயந்து ஒதுங்காமல் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பிறக்கிறது.


5. டேக்வான்டோ


கைகளை விட கால் சுறுசுறுப்பாக இயங்குகிறதா, உங்களுக்கு சரியான தற்காப்பு கலை, டேக்வான்டோ. சீனாவின் பாரம்பரிய தற்காப்பு கலைகளையும், ஜப்பானில் உருவான கராட்டேவையும் உள்வாங்கி கொரியாவில் உருவான பிரமாதமான தற்காப்பு கலை, டேக்வான்டோ. தலையில் உதைத்தல், குதித்து உதைத்தல், சுழன்று உதைத்தல், பறந்து வந்து உதைத்தல் போன்ற வேகமான உதைக்கும் டெக்னிக்களை கொண்ட கலை இது. இதிலும், குத்துதல், கைகளால் தடுத்தல் போன்ற முறைகள் உள்ளன. ஆனாலும், டேக்வான்டோவில் உதைத்தலே பிரதானம். ஆண்கள், பெண்களை பயமின்றி சீண்டுவதற்கு காரணம், அவர்களால் எதுவும் செய்யமுடியாது; தடுக்க முடியாது என்பதுதான். அந்த நேரத்தில் டேக்வான்டோ தெரிந்த பெண்களாக இருந்தால், பயிற்சி பெற்ற அவர்களின் கால்கள், எதிரியின் முகத்தை கண் இமைக்கும் நேரத்தில் பதம் பார்த்துவிடும். கைகளைக் காட்டிலும், கால்கள் இயல்பாகவே பலமானது என்பதால் எவரையும் எளிதில் வீழ்த்தலாம்

No comments:

Post a Comment