Friday 18 January 2019

உலகில் உள்ள வித்தியாசமான விமான ஓடுதளங்கள்(Run Way)

உலகில் உள்ள வித்தியாசமான விமான ஓடுதளங்கள்(Run Way)

விமானப்பயணம் என்பது எப்போதும் சுவாரஸ்யமான ஒன்று தான். அதிலும் முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்பவர்கள், அந்த  அனுபவத்தை நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.


விமானம் தரையிறங்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறீர்கள்.  அங்கே விமான ஓடுதளத்திற்கு பதிலாக ஒரு கடற்கரையோ, ஒரு ரயில்வே ட்ராக்கோ இருந்தால் எப்படி இருக்கும். அப்படியான கிலி ஏற்படுத்தும் டாப் 5 விமான நிலையங்களுக்கு ஒரு ட்ரிப் அடிப்போமா..


1. பாரா ஏர்போர்ட் ( ஸ்காட்லாண்ட்) :


ஸ்காட்லாந்தின்  பாரா என்ற குட்டி தீவில் அமைந்திருக்கிறது இந்த கடற்கரை விமான நிலையம்.1936 ஆம் ஆண்டிலிருந்து  இந்த விமானசேவை இயங்கி வருகிறது. உலகிலேயே கடற்கரையை  விமான  ஓடுதளமாக பயன்படுத்துவது இங்கு மட்டும் தான். வருடத்திற்கு 10,000 பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். கடற்கரையில் உருவாகும் அலைகளின் அளவை பொறுத்தே விமானத்தை லேண்டிங் செய்யவோ, டேக் ஆஃப் செய்யவோ முடியும். இயற்கை ஒத்துழைப்பில்லையென்றால் ”சாரி பாஸ்!” என்று அறிவித்துவிட்டு ரிட்டர்ன் அடித்துவிடுவார்கள்.  உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாராவில் லேண்ட் ஆகலாம்.

2. பில்லி பிஷப் டொரெண்டோ சிட்டி ஏர்போர்ட் (கனடா):


கனடாவின் டொரெண்டோ நகரில் அமைந்திருக்கிறது இந்த விமான நிலையம். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமான நிலையம் அமைந்திருப்பதே ஓர் ஏரிக்கு நடுவில்..! டொரெண்டோ நகரின் ஒன்டேரியோ ஏரியின் நடுவில் இந்த விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சுற்றிலும் ஏரி நடுவில் விமான ஓடுதளம் என பில்லி பிஷப் விமான தளத்தில் தரையிறங்குவது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். கனடாவின் பரபரப்பான விமான நிலையங்களில் இந்த விமான நிலையமும் ஒன்று.

3. ஜிஸ்பார்ன் ஏர்போர்ட் (நியூசிலாந்து):


விமானம் தரையிறங்கப்போகிறது சீட்பெல்ட்டை அணிந்து கொள்ளவும் என பைலட் சொன்னதும் கொஞ்சம் ஜன்னல் வழியே எட்டி பார்த்தால். நிச்சயமாக கொஞ்சம் திகில் ஏற்படத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் எட்டிப் பார்க்கும்போது ரன்வேயில் ரயில் ஓடிக் கொண்டிருக்கலாம்.  வருடத்திற்கு 150,0000 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். மற்ற விமான நிலையங்களில் விமானத்தை தரையிறக்குவது பைலட்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.ஆனால் இங்கே ரயில்வே, விமான நேரங்களை கையாளும் சவால் விமான நிலைய அதிகாரிகளுக்கு தான் காத்திருக்கிறது.
 
4. அகத்தி விமான தளம் (லட்ச தீவுகள்,இந்தியா):


விமான ஓடுதளத்தை சுற்றிலும் கடல் இது தான் அகத்தி  விமான தளத்தின் ஹைலைட். இந்தியாவின்  லட்ச தீவுகளில் அமைந்துள்ளது அகத்தி விமான தளம்.1988 முதல் இந்த விமான தளம் செயல்பட்டு வருகிறது. டோர்னியர் 228 ரக விமானங்களை இயக்குவதற்காகவே விமான தளம் முதலில் உருவாக்கப்பட்டது.பின்னர் அருகிலுள்ள கல்பட்டி தீவையும் இணைத்து பாலத்தில் நெடிய விமான ஓடுபாதையை அமைக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சூழலியல் காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. உலகின் அபாயகரமான விமான ஓடுதளங்களில் இதுவும் ஒன்று. 

5.ஜிப்ரால்டர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்  (ஜிப்ரால்டர்):


விமான ஓடுதளம் ஆரம்பிக்கும் இடத்தில் சிறிது தொலைவிற்கு இரண்டு பக்கமும் தண்ணீர். அதை தாண்டி ஓடுதளத்தை ஒட்டி பக்கவாட்டில் ஒரு மலை. மலையை கடந்ததும் ஒரு சாலையை குறுக்காக கடந்தால்  ஜிப்ரால்டர் விமான நிலையம் உங்களை வரவேற்கும். என்ன... டோரா பயணம் போல தண்ணீர், மலை, சாலை என நீள்கிறதா?

இதுதான் இந்த விமான நிலையத்தின் ஸ்பெஷல். தினமும் மூன்று விமானங்கள் இந்தப் பாதையில் இயக்கப்படுவதோடு வாரத்திற்கு மூன்று முறை மான்செஸ்டரிற்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான ஓடுதளத்தின் நடுவே செல்லும் சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பினாலோ, நிலையத்தை வந்தடைய
வேண்டுமென்றாலோ வாகனங்கள் நிறுத்தப்படும். நம் ஊரில் ரயில்வே க்ராஸிங்கை கடப்பது போல, கடக்கலாம் என்று முயற்சித்தால் சட்னிதான் பாஸ்!



2 comments: